கார் / மோட்டார்வண்டி

சுவிஸில் வளர்ச்சியடைந்த வீதி வலையமைப்பு உள்ளது. அதிகமான வீதிகளைக் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம். போக்குவரத்து விதிகள் முக்கியமானவை. அதைக் கடைப்பிடிக்கத் தவறினால் அபராதப்பணம் அதிகம் கட்டவேண்டும்.

போக்குவரத்து விதிகள்

சுவிஸில் போக்குவரத்து விதிகள் கார் ஓட்டுனர்களுக்கு மிகவும் முக்கியமானவை. மற்றைய நாடுகளை விட இங்கு அபராதப்பணமும் அதிகம். போக்குவரத்து விதியைக் கடுமையாக மீறினால் சாரதிப்பத்திரம் பறிக்கப்படலாம்.

முக்கியமான சில விதிகள்:

  • அதிகூடிய வேகம் நகரப்பகுதிகளில்: 50 km/h; நகர வெளிப்பகுதிகளில்: 80 km/h, நெடுஞ்சாலையில்: 100km/h, தேசிய நெடுஞ்சாலையில் 120 km/h
  • நெடுஞ்சாலையில் வலது புறமாக முந்திச்செல்லலுக்குத் தடை. இடது அல்லது நடு பாதையில் ஒரு நெடுவரிசை இருந்தால், தேவையான எச்சரிக்கையுடன் வலதுபுறம் கடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.
  • பகலிலும் லைற் போட்டிருக்கவேண்டும்.
  • காரில் பயணிக்கும் அனைவரும் பட்டி அணிந்திருக்க வேண்டும்.
  • பிள்ளைகள் பிள்ளைகளுக்குரிய விசேட இருக்கையில் இருத்தப்பட வேண்டும். (12 வயது வரை அல்லது 150 செமீ உயரம்)
  • வாகனம் செலுத்தும் போது இன்ரர்காமில் மட்டும் தொலைபேசலாம்.
  • மதுபானம் - போதைப் பொருட்கள் பாவித்த (புரோமில் அளவு எல்லை 0.5) பின் வாகனம் செலுத்துவது தண்டனைக்குரியது.
  • பாத சாரிகள் மஞ்சள் நடைபாதையில் இருந்தால் எப்போதும் அவர்களுக்குத் தான் முன்னுரிமை (வீதியைக் கடக்கப் போக்குவரத்து விளக்குகள் இல்லாதபோது )

வீதிக்கட்டணங்கள்

வீதிகள் அரசு மாநிலம் கிராமசபையால் செலவு செய்து நிர்வகிக்கப்படுகின்றன. வீதிகளைப் பயன்படுத்துவது கட்டணமற்றது.நெடுஞ்சாலைகள் இதற்கு விதிவிலக்கானவை: நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு வரிவடிவம் (Vignette) வாங்கவேண்டும். இதைக் காரின் கண்ணாடியில் ஒட்டவேண்டும். இந்த வரி வடிவத்தைப் பெற்றோல் நிரப்பு நிலையங்களிலோ தபால்கந்தோரிலோ அல்லது வீதிப்போக்குவரத்து இலாகாவிலோ பெறலாம்.

காப்பீடு

சுவிஸில் மோட்டார் வாகனங்களுக்குக் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே பாவிக்க முடியும். மோட்டார் வாகனப் பொறுப்புக் காப்பீடு (Motorfahrzeug-Haftpflichtversicherung) பல வகையான தனிப்பட்ட காப்பீட்டாளர்களால் செய்யப்படுகிறது. இந்தக் காப்பீடு பொருட்களுக்கோ அன்றி மனிதர்களுக்கோ அந்த வாகனத்தால் ஏற்படும் சேதங்களுக்குப் பணம் செலுத்துகிறது. சொந்த வாகனத்துக்கு ஏற்படும் சேதங்களுக்கு உதவுவதற்கு மேலதிகமாக பலவகையான சுய இடர்காப்பீடுகள் உள்ளன (Kaskosversicherung). கவனம்: யாராவது முரட்டுத்தனமாகக் கவனக்குறைவால் சேதம் ஏற்படுத்தியிருந்தால் (உதாரணத்திற்கு மதுபானம் அல்லது போதைப் பொருட்கள் பாவித்திருந்தால்). காப்பீடு பெறமுடியாது. மோட்டார் வாகனப் பொறுப்புக் காப்பீடானது தனியார் பொறுப்புக்காப்பீட்டில் உள்ளடங்கி இருக்காது.

ஒரு மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்தல்

ஒரு மோட்டார் வாகனத்தை நிரந்தரமாக சுவிசுக்கு இறக்குமதி செய்ய விரும்பினால் இதைச் சுங்கத்திணைக்களத்திற்கு அறிவித்து வரிசெலுத்தவேண்டும். வாகனத்தின் தொழில்நுட்பமும் பரிசோதிக்கப்பட வேண்டும். மோட்டார் வாகனப்பொறுப்புக் காப்பீடு செய்திருந்தால் தான் சுவிஸ் வாகனப்பத்திரமும் சுவிஸ் இலக்கத்தகடும் எடுக்க முடியும். சரியான தகவல்களை Basel-Stadt மோட்டார் வாகன கட்டுப்பாட்டில் (Motorfahrzeugkontrolle) பெறலாம்.

Carsharing

கார் பகிர்வு (Carsharing) என்பது பலர் ஒன்று அல்லது மேற்பட்ட கார்களை பகிர்ந்து கொள்வது என்பதாகும். ஒரு கார் பகிர்வு அமைப்பின் வாகனங்கள் பொதுவாக வாடகை பார்க்கிங் இடங்களில் இருக்கும், மேலும் அவை முன்கூட்டியே ஆன்லைன் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதன் அமைவிடங்கள் பெரும்பாலும் பொது போக்குவரத்து மையங்களில் இருக்கும் (எ.கா. ரயில் நிலையங்கள்). கார் வாடகைக்கு மாறாக, வாகனத்தை ஒரு குறுகிய நேரத்திற்குப் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக சில மணி நேரங்களுக்கு.